சிறுகதைக் கலை கொஞ்சம் சுலபமாகவே இருக்கிறது. பெரும்பாலும் இரண்டு, மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு எளிதில் ஒரு பொம்மலாட்டத்தை நிகழ்த்தி சில நிமிட நேரங்களுக்குள் வாசகனைப் பிரமிப்புக்குள் மூழ்கடித்து விடுகிறான் சிறுகதையாசிரியன். ஒரு நாவல் எழுதுவது அத்தனை எளிதல்ல. நிறைய பொம்மைகளைக் கொண்டு சிடுக்குகள் ஏதும் விழாமல் பெரும்பாலும் ஒரே நேரத்திலேயே கலைநிகழ்த்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறான் நாவலாசிரியன். அதோடு அவன் பல மணிநேரங்கள் வாசகனின் கவனத்தையும் கோரி இழுத்துப் பிடித்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கிறன்.

பெரும்பாலும் ஒரு வண்ணநூலைக் கொண்டு ஒற்றை வண்ண உடையொன்றை உருவாக்குகிறான் சிறுகதை எழுத்தாளன். வெவ்வேறு வண்ணநூல்களைக் கொண்டு பலவண்ணமுடைய ஆடை ஒன்றை நெய்கிறான் நாவலாசிரியன். பல வடிவங்கள் அவ்வாடையில். பூவும் இருக்கலாம்,பூவையும் இருக்கலாம், பூதமும் இருக்கலாம். அவரவர் மனவிகற்பங்களுக்கும் விகாரங்களுக்குமேற்ப அவ்வடிவங்களும் வண்ணங்களும் பிடித்ததாகவோ பிடிக்காததாகவோ அமைகின்றன. சோக இசைக்கென்றே கூட பொருந்தி வரும் மனதுடையவர்கள் நம்மில் இருக்கிறார்கள் அல்லவா?

கொமோரா அந்த வகையில் எதிர்மறை வண்ணத்திலிருக்கும் நாவல் எனலாம். வெறுப்பின் நாவல் என்று நாவலாசிரியர் முன்னுரையிலேயே நம்மிடம் சொல்லிவிடுவதால் உள்ளே நமக்காக என்ன காத்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. வெறுப்பும், வெறுப்பின் பின்னாலிருக்கும் நியாயங்களுமே இந்நாவலின் பேசுபொருள் என்கிறார் ஆசிரியர். அன்பைப் போலவே அசாத்திய வெறுப்பும் அருவெறுப்பும் நிஜம் என்று முன்னுரைக்கிறார்.

கொமோரா என்கிற பெயரிலிருந்தே நாவலின் எதிர்மறைத்தன்மை ஆரம்பிக்கிறது. விவிலியத்தில் சோதோம், கொமோரா நகரங்கள் எதிர்மறைக்கு எடுத்துக்காட்டுகளாக, பாவத்தின் சின்னங்களாக பலமுறை வந்து போகின்றன. யாவே என்னும் கோபமுள்ள கடவுள் சோதோம் கொமோராவைப் போலாக்குவேன் என்று பலமுறை தன்னைப் பின்தொடரும் மக்களுக்கு மிரட்டல் விடுத்தே வழிப்படுத்துகிறார்.

இந்த சோதோம் கொமோராவின் பின்னணி என்ன? விவிலிய மூதாதை ஆபிரகாமின் உறவினனான லோத்து சோதோம் கொமோராவில் தங்கியிருக்கிறான். அப்பொழுது யாவே சோதோம் கொமோராவின் பாவத்தைக் கண்டு அந்நகரங்களை அழிக்க எண்ணங்கொள்கிறார். சோதோம் கொமோராவுக்காக ஆபிரகாம் பேசும்போது அந்நகரங்களில் பத்து நல்லவர்கள் கூட இல்லை என்கிறார் யாவே. யாவேயின் தேவதூதர்கள் மனித வடிவில் போய் லோத்தின் வீட்டில் தங்குகிறார்கள். அந்நகரத்து மனிதர்கள் புதிதாக வந்த விருந்தாளிகளைப் ஓரினப் புணர்ச்சி செய்ய விரும்பி லோத்தின் வீட்டைச் சூழ்ந்து கொள்கிறார்கள். லோத்து தன் மகள்களைப் புணருமாறும் விருந்தாளிகளை விட்டுவிடுமாறும் வேண்டுகிறான்.

இதற்கு நகரத்தவர்கள் மசியாதிருக்கவே தேவதூதர்கள் அவர்களைக் குருடர்களாக்கி லோத்தைப் பாதுகாப்பாக நகரத்திற்கு வெளியே கொண்டுவிடுகிறார்கள். சோதோமையும் கொமோராவையும் வானத்திலிருந்து அக்கினியையுயம் கந்தகத்தையும் பொழியப்பண்ணி சுட்டெரிக்கிறார் யாவே.அந்தப் பட்டணங்களையும், அந்த சமபூமியையும், பட்டணங்களின் குடிகளையும், பயிர்களையும் யாவே தீயினால் அழித்ததாகவும், அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப் போல் எழும்பியதாகவும் வர்ணிக்கிறது விவிலியம்.

கொமோரா என்னும் பெயருக்கேற்ப எதிர்மறைத் தன்மை நாவல் முழுக்கவே விரவிக்கிடக்கிறது.வெறுப்பு, வன்முறை, காதலின் சுவடில்லாத காமம் என இவற்றைப் பற்றியே கொமோரா பேசுகிறது. காதல், கருணை போன்ற உணர்வுகள் பாலைவனத்தைப் போலிருக்கும் கதிரின் வாழ்வில் கானல்நீராகத் தோன்றி மறைகின்றன. விடுதியில் விடப்படும் கதிருக்கு ரோஸி ஆன்ட்டி கருணையைக் காட்டுகிறாள். ஆனால் அவள் சூழ்நிலைகளால் கதிர் என்கிற கிருபாவை விட்டுப் பிரிய நேர்கிறது. முருகன் காதலைப் பொழிகிறான். ஆனால் தன்பாலீர்ப்பைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் சூழல் இல்லாத நிலையில் அவனும் கடல்கடந்து கதிரைப் பிரிகிறான். சத்யா கதிரைக் காதலிக்கிறாள். இருந்தாலும் இன்ன சாதி பூட்டுக்கு இன்ன சாதி சாவிதான் என்கிற எழுதப்படாத விதியால் கதிரின் வாரிசைத் தனது வயிற்றில் சுமந்து தனது குடும்பத்தினராலேயே கொல்லப்படுகிறாள் சத்யா.

கருணையையும் காதலையும் சொட்டு சொட்டாகவே கதிர் ருசி பார்க்கிறான். அவன் முழுதாக அவற்றை உணரும் முன் அவனிடமிருந்து அவை விலக்கப்பட்டு வன்மத்துடன் பிடுங்கப்படுகின்றன.அதனால் ஏற்படும் ஏமாற்றம் அவனது வெறுப்புணர்ச்சியை அதிகரிக்கிறது. வன்முறையில் மற்றுமொரு படியேறச் செய்கிறது.

கதிருக்கும் முருகனுக்குமிடையிலிருக்கும் தன்பாலீர்ப்பு கொமோரா என்னும் பெயர் இன்னும் பொருந்திவர வாகாக அமைகிறது. சோதோம் கொமோரா நகர் மக்கள் விருப்பமில்லாத விருந்தாளியுடன் பாலுறவு கொள்ள முயன்றதற்காகத் தண்டிக்கப்படவில்லை. தன்பாலுறவு கொள்ள விரும்பியதாலேயே கொல்லப்படுடகிறார்கள் என்பதைப் பல விவிலிய வாக்கியங்கள் உணர்த்தி நிற்கின்றன. Sodomize என்பது குதப் புணர்ச்சிக்கு ஆங்கிலத்தில் இன்னும் வழங்கப்படும் வார்த்தை.

கதிர் இரண்டு முறை முக்கியமான சமூக விதிகளை மீறியதாலேயே அதிகம் பாதிக்கப்படுகிறான்.அவன் செய்யும் கொலையோ, குற்றச்செயல்களோ அவனை அவ்வளவு தீவிரமான பாதிப்புக்குள்ளாக்குவதில்லை. முருகனுடனான தன்பாலீர்ப்பை சக்தி (முருகனின் மனைவி)அறிந்துவிடுவதால் அவன் முருகனை விட்டு நெடுங்காலம் பிரிய நேர்கிறது. சத்யாவுடனான சாதிகடந்த காதலால் சத்யாவே கொல்லப்படுகிறாள். அது வன்முறையினின்று மீட்சியின் பக்கம் லேசாகச் சாய்ந்த கதிரை விலக்கி முழுதாய் வன்முறையின், பிறழ்ச்சியின் பக்கமாகவே சாய வைக்கிறது. அதனுடன் அவன் இளமைப்பருவத்தில் அவன் மீது திணிக்கப்பட்ட வன்முறைகளும் சேர்ந்து கொள்கின்றன. ஒரு கட்டத்தில் பிறழ்வுச் சமூகத்தின் அங்கமாகவே கதிர் மாறிப்போகிறான்.

பிறருக்கு எந்த தீங்குமில்லாமல், ஆனால் சமூகம் எழுதப்படாத விதியாகக் கடைபிடித்து வரும் எல்லைக்கோட்டினைக் கதிர் தாண்டும்போது தான் அவன் துன்பம் பெருகுகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் அவன் வாழும் பிறழ்வாழ்வு துன்பங்கள் பெரிதுமில்லாமல் அவனுக்கு உகந்ததாகவே இருக்கிறது. அந்தப் பிறழ்வு நிலையில் தான் அவன் இயல்பாக இருக்கிறான். பொட்டலம் விற்கிறான். சிறைக்குள் பொட்டலம் கடத்துகிறான். காதலின்றி காமத்துடன் புணர்கிறான். தனது தந்தை அமைச்சர் சிபாரிசுடன் நன்னடத்தை விடுதலை அடையும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவனாகத் திகழ்கிறான்.

கதிரின் தந்தையான அழகர்சாமியின் இளமைப்பருவமோ இன்னும் கொடியது. கம்போடியாவில் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் கெமெர் ரூஜ் நுழைகிறது. கெமெர் வாழ்க்கையில் சித்திரவதைப்பட்டு தான் அறிந்த உறவுகளெல்லாம் சித்திரவதை முகாம்களில் அவன் காணாத இடங்களில் கொல்லப்பட, கட்டாயப் பணிமுகாமுக்குள் தள்ளப்படுகிறான்.ஏதிலியாகவே தன் தாய்மொழியை முக்கால் பங்கு மறந்து தன் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறான்.

1975–1979 காலகட்டத்தில் கம்போடியாவில் கம்பூச்சிய கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிபுரிந்தது. சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக சீன, அமெரிக்க ஆதரவுடன் போல்பாட்டின் கொடுங்கோலாட்சியில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பல மக்கள் பலவிதமான சித்திரவதைக்கும் கொடுமைகளுககும் ஆளானார்கள். பதினைந்து லட்சத்திலிருந்து இருபது லட்சம் கம்போடிய மக்கள் இக்காலகட்டத்தில் இறந்திருக்கக் கூடும் என்பது கணிப்பு. கம்போடிய மக்கள் தொகையில் இருபத்தைந்து சதவீதம்! இன்னும் பல கல்லறைகளைத் தோண்டி காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். தனக்கு ஏதும் நேராத வரை வெளியுலக மனிதர்களுக்கு இவை வெறும் புள்ளிவிவரங்கள் தான். ஆனால் அந்தக் காலத்தில் அந்த நரகத்தில் வாழ்ந்த அழகர்சாமி போன்ற மனிதர்களுக்கு?

அழகர்சாமியின் இளமையைப் பற்றி நாவலில் பெரிய குறிப்புகள் ஏதுமில்லை. ஆயா சொல்லும் சில குறிப்புகளே உள்ளன. கம்போடிய கொடுமை வாழ்க்கை அழகர்சாமிக்கு ஒரு சமூக — எதிர் ஆளுமையைக் (Anti Social Personality) கொடுத்திருந்தது என ஆயா சொன்ன சில விஷயங்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. எந்த நம்பிக்கையுமில்லாத முழுக்க முழுக்க தன் நலத்தையும் சுகத்தையும் மட்டுமே விரும்பும், அவ்விருப்புக்காக எந்த எல்லைக்காகவும் போக விரும்பும் ஆதிகால மனித மிருகமாகவே கம்போடியாவிலிருந்து அழகர்சாமி திரும்பி வந்திருக்கிறான் என்பது சிறையில் நடக்கும் மோதல்களின் மூலமாக நமக்குத் தெளிவாகவே வெளிப்படுகிறது.

இளமைக்காலத்தில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அழகர்சாமியால் வன்முறைச் சுழலை விட்டு மீளவே முடியவில்லை. அளவுமீறிய காமத்தில் நிகழ்ந்த வன்முறையால் அழகர்சாமி சிறைக்குப் போகிறான். தனது மகனின் வாழ்வில் இல்லாமையின் மூலமாக, நிரந்தரமாகத் தனது மகனின் மீது ஏற்றிவைத்த குற்றவாளியின் மகன் என்கிற பாரத்தின் மூலமாகவே கதிரின் வாழ்வில் அழகர்சாமி வெளிப்படுகிறான். அந்த வன்முறை அவனது மகனான கதிரையுமே சுற்றி வருகிறது. கதிரின் மீது செலுத்தப்படும் வன்முறைகள், பதிலுக்குக் கதிர் நிகழ்த்தும், நிகழ்த்தாமலிருக்கும் வன்முறைகள் தான் கொமோரா.

இந்த நீளமான வன்முறையும் பிறழ்வுமான வாழ்வுப் பயணத்தில் தான் கதிர் பல மனிதர்களை சந்திக்கிறான். விடுதியின் ரோஸி டீச்சர், சந்திரன், முருகன், ஆன்ரூ சாமி, சுதா, சக்தி, விஜி,சுப்புராஜ் என எக்கச்சக்கமான மனிதர்கள். ரோஸி டீச்சரைத் தவிர எல்லோருமே சமூகத்தின விளிம்பில் வாழ்கிறவர்கள். பிறழ்வு நிலையில் வாழ்பவர்களுமுண்டு.

கதிர் தனது வாழ்வின் பல கட்டங்களில் பிறழ்வு நிலையை இறுக்கத் தழுவிக் கொள்கிறான்.நம்பிக்கை வெளிச்சம் அவ்வப்போது தலைநீட்டினாலும் மீண்டு வருகிறது பிறழ்வு.

இந்த வன்முறைச் சுழலிருந்து கதிரால் மீள முடியுமா என்பதற்குப் பதில் தான் நாவலின் உச்சமான அழகர்சாமியின் கொலை. கதிர் தனது தந்தையைக் கொலை செய்கிறான். அதன்மூலமாக அவன் தன் வன்முறையின் ஆதி ஊற்றை அடைத்து விடுகிறானா என்ன? இல்லையென்றால் தந்தையைக் கொலை செய்வதன் மூலம் தனக்கான பிறழ்வு நிலையை இன்னும் வலுப்படுத்திக் கொள்கிறானா?அதற்கான பதில் நாவலில் இல்லை. ஆனால் அவன் தனது தந்தையைக் கொலை செய்வதன் மூலமாகத் தனது கடந்த காலத்தையும் கொன்று புதைக்கிறான் என்றே நாம் புரிந்து கொள்ள வைக்கிறது அவனுக்கு முன்னிருக்கும் மலேசிய வாழ்வு.

வரலாறும் வாழ்வும் மாற்றுகளைப் பற்றி சில நேரங்களில் சிந்திக்க வைக்கின்றன. ஒருவேளை போல்பாட்டின் ஆட்சி கம்போடியாவில் நிகழாமலிருந்திருந்தால்? ஒருவேளை சத்யா — கதிர் திருமணம் அவர்கள் திட்டமிட்டபடி முடிந்திந்தால்? ஒருவேளை கதிர் அழகர்சாமியைக் கொல்லாமலே மலேசியா கிளம்பிப் போயிருந்தால்?

கொமோரா நாவல் இரண்டு கதையோட்டங்களாகப் பயணித்து அழகர்சாமி என்கிற புள்ளியில் ஒன்றிணைகிறது. கம்போடியாவில் கெமெர் ரூஜ் காலத்திலிருந்த அழகர்சாமியின் இளமைக்காலத்தையும் விவரித்து கதிர் தனது தந்தையான அழகர்சாமியைக் கொல்வதின் மூலமாக முழுமையான மனிதனாக உணர்வதில் நாவல் உச்சமடைகிறது.

இளமையில் பசி, உடல் மீதான் வன்முறை, காம மீறல்கள் என்கிற வரிசையில் பார்த்தால் கதிரின் கதையும், அழகர்சாமியின் கதையும் ஒரே மாதிரியாக நகர்வதை உணரலாம். இந்த இரண்டு கதையோட்டங்களும் நேர்ப்பாதையில் தனித்தனியாகச் சென்றாலும், வன்முறை, பிறழ்வுநிலை என்பவை கதையோட்டங்களை இணைக்கும் கண்ணியாகத் தொடர்கின்றன.

பிறழ்வுநிலையைப் பேசுவதன் மூலமாக, பிறழ்வுநிலையில் வாழும் மனிதர்களைப் பற்றியே பேசுவதன் மூலமாக, வெறுப்பு, வன்முறை, காதலற்ற காமம் போன்றவற்றையும் சித்தரிப்பதின் மூலமாகப் பெருஞ்சமூகத்தின் எதிர்நிலையில், சமூகத்தின் விளிம்புகளில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைப் பேசி எதிர்மறை அழகியலோடு தன்னை நிறுத்திக் கொள்கிறது நாவல்.

இறுதியாகத் தமிழ் துணைப்பாட நூல்களில் கேட்கப்படுவதைப் போல, இந்நாவலின் மையக் கருத்து என்ன? இந்த நாவலுக்கு மையக் கருத்து என்று ஏதும் கிடையாது என்றே நினைக்கிறேன்.மையக்கருத்து என்று ஏதாவது இருந்தால், மிக எளிமையான நீதி போதனைக் கதையாகவே முடித்திருக்கலாம்.

--

--

Shineson

A cinephile, musicophile, bibliophile and to add another sin, a writer.